கடைசி பந்தில் இலங்கை "திரில்' வெற்றி! * இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து இலங்கை அணி "திரில்' வெற்றி பெற்றது. சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது இலங்கை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 10வது, பெண்கள்
உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடக்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. மும்பையில் நேற்று நடந்த "ஏ' பிரிவு போட்டியில் "நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சஷிகலா சிரிவர்தனே, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
குன் ஆறுதல்:
முதலில் "பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் சார்லோட்டி எட்வர்ட்ஸ் (9), டேனியலி வியாட் (15) ஏமாற்றினர். ஆரன் பிரின்டில் (31) ஓரளவு கைகொடுத்தார். லிடியா கிரீன்வே (2) ஏமாற்றினார். "மிடில்-ஆர்டரில்' வந்த ஹீதர் நைட் (38), ஜென்னி குன் (52), அமி ஜோன்ஸ் (41) நம்பிக்கை அளித்தனர். கதரின் புருன்ட் (12) ஏமாற்றினார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்தது. டேனியலி ஹசல் (19), ஹோலி கால்வின் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் கவுசல்யா, சிரிவர்தனே, செனிவிரத்னா தலா 2, டோலாவாட்டி ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
சூப்பர் துவக்கம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு சாமரி ஜெயங்கனி, யசோதா மெண்டிஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த ஜெயங்கனி, அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த போது ஜெயங்கனி (62) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த யசோதா மெண்டிஸ் (46) அரைசத வாய்ப்பை இழந்தார். கேப்டன் சஷிகலா சிரிவர்தனே (34) ஓரளவு கைகொடுத்தார்.
கவுசல்யா அபாரம்:
அடுத்து வந்த பிரசாதனி வீரக்கொடி (1), சான்டமாலி டோலோவாட்டி (4), சாமணி செனிவிரத்னா (14), ஸ்ரீபாலி வீரக்கொடி (0), தீபிகா ரசாங்கிகா (9) ஏமாற்றினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஈஷானி கவுசல்யா, தனிநபராக போராடினார்.
திரில் வெற்றி:
இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ஜார்ஜியா எல்விஸ் வீசிய முதல் பந்தில் சுரன்கிகா, ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்த கவுசல்யா, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் ஸ்கோர் சமமானது. நான்காவது பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட கவுசல்யா (56), "ரன்-அவுட்' ஆனார். ஐந்தாவது பந்தை எல்விஸ் துல்லியமாக வீச, ரன் எதுவும் கிடைக்கவில்லை. கடைசி பந்தை சுரன்கிகா, சிக்சருக்கு பறக்கவிட, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து, "திரில்' வெற்றி பெற்றது. சுரன்கிகா (8) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் புருன்ட், எல்விஸ், பிரின்டில் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை வீராங்கனை கவுசல்யா,
புதிய சாதனை
இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில், இலங்கை அணி முதன்முறையாக இங்கிலாந்தை வீழ்த்தியது. இதுவரை இவ்விரு அணிகள் 9 போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 7, இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* நேற்று, 244 ரன்கள் எடுத்து "சேஸ்' செய்த இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2010ல், கொழும்புவில் நடந்த போட்டியில் 187 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதேபோல, உலக கோப்பை அரங்கிலும், இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக 2009ல் கான்பெராவில் நடந்த உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 177 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தோல்வி
கட்டாக் நகரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் "பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 46.1 ஓவரில் 175 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 33.2 ஓவரில் 84 ரன்களுக்கு சுருண்டு, 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அபாரம்
கட்டாக் நகரில் நடந்த மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு சோபி டிவைன் (145), கேப்டன் சுசி பேட்ஸ் (72) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி, 41 ஓவரில் 170 ரன்களுக்கு சுருண்டு, 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Comments