விண்டோஸ் 8! சில குறிப்புகள்!

போட்டோ நிர்வாகம்:
நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம்.
இந்த அப்ளிகேஷன் சில அடிப்படையான வேலைகளை மட்டுமே மேற்கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இந்த அப்ளிகேஷனைத் திறந்து, நாம் காட்ட விரும்பும் போட்டோ பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் அதனை நம் விருப்பப்படி காட்டுகிறோம்.
இதற்கும் மேலாக போட்டோக்களின் மீது வேலைகளை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் இலவச அப்ளிகேஷன் புரோகிராமாக Windows Photo Gallery என ஒன்றைத் தந்துள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நாம் பல இலக்குகளுடன் கையாளலாம்.
இதனைப் பெற, மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று Windows Photo Gallery என டைப் செய்து தேடவும். இந்த சாப்ட்வேர் தொகுப்பு, Windows Essentials 2012 என்ற கூட்டுத் தொகுப்பில் ஒரு புரோகிராம் ஆகும்.
நம் பட பைல்களைத் பெற்று மற்றும் அனுப்பும் வேலையை இந்த சாப்ட்வேர் தானாகவே மேற்கொள்ளும் வகையில் அமைத்திடலாம். நம் டிஜிட்டல் கேமரா குறித்த சில தகவல்களைத் தந்து இதனை செட் செய்திட வேண்டும்.
போட்டோக்களை அவை எடுக்கப்பட்ட நாள், பைல் அளவு, கேமரா மற்றும் பல பண்பு வகைகளின் அடிப்படையில் பிரித்து அமைக்கலாம். மேலும் ஒவ்வொரு பைலுக்கும், நாம் விரும்பும் தகவல்களை இணைக்கலாம். தலைப்பு கொடுக்கலாம்; அவற்றை அடையாளம் காணும் சொற்களைத் (tags) தரலாம். இவ்வாறு தகவல்களை இணைத்துவிட்ட பின்னர், அவற்றை வகைப்படுத்தித் தேடுவது எளிதாகிவிடும்.
இதே சாப்ட்வேர் தொகுப்பு மூலம் படங்களின் அளவை மாற்றலாம். டிஜிட்டல் கேமராக்களில் படங்களை எடுக்கையில் கண்களில் அமையும் சிகப்பு புள்ளிகளை நீக்கலாம். படங்களில் சில டச் அப் வேலைகளை மேற்கொள்ளலாம்.
இந்த வகைகளில், நம் படங்களை நாம் கையாள ஒரு எளிதான சாப்ட்வேர் தொகுப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Photo Gallery நமக்குக் கிடைத்துள்ளது.
லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்க:
விண்டோஸ் 8 அதன் லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடக்கமே மிக அழகாக நம்மைக் கவர்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்திட வேண்டும் என நமக்கு எதுவும் தெரியாமல் அதனையே பார்க்கிறோம். என்ன செய்யலாம்?
ஸ்பேஸ் பாரினைத் தட்டுங்கள் மவுஸ் வீலைச் சற்று சுழற்றுங்கள் அல்லது டச் ஸ்கிரீன் என்றால், கீழிருந்து மேலாக விரலால் ஸ்வைப் செய்திடுங்கள். இந்த வேலைகளை மேற்கொண்டால், நமக்கு வழக்கம் போலக் காட்டப்படும் லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும்.
இங்கு நீங்கள் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திடுகையில் அமைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை அமைத்து, கம்ப்யூட்டரில் உங்கள் பணியைத் தொடங்குங்கள்.
சில அடிப்படை வசதிகள்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பணி இடை முகம் (interface) அனைத்தும் வண்ண வண்ண ஓடுகளால் அமைக்கப்பட்டு, தொடு உணர்தலில் சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கும் வகையில் கிடைக்கின்றன. நீங்கள் டேப்ளட் பி.சி. பயன்படுத்துபவராக இருந்தால், இவை அனைத்தும் நேரடியாகவே கிடைக்கும்.
இடது வலதாகத் திரையில் சுழன்று சென்று, நமக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் டைல் மீது கிளிக் செய்து, அப்ளிகேஷனைப் பெறலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மவுஸ் வீல் முன் பின்னாகச் சுழற்றி இவற்றைப் பெறலாம்.
இவை இல்லாமல், கீ போர்டினையும் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருக்கையில் Home அல்லது End கீகளைப் பயன்படுத்தி சாப்ட்வேர் டைல்ஸ் அடுக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாகச் செல்லலாம்.
பின்னர் கர்சர் கீகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட டைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர், என்டர் அழுத்தி, அதனை இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம்.
மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் பெற, விண்டோஸ் கீ அழுத்தவும். ஏதேனும் திறக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன்மீது ரைட் கிளிக் செய்து, அல்லது ஸ்வைப் செய்து, கிடைக்கும் மெனுவில் Unpin என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பிட்ட சில புரோகிராம்களின் டைல்ஸ்களை, ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து அவற்றை ஒரு குழுவாக அமைக்கலாம்.

Comments