கூகுள் ரீடர் சேவையை அதிரடியாக நிறுத்திய கூகுள் நிறுவனம்!

உலகின் பிரபல தேடுதள றுவனமான கூகுள், தனது கூகுள் ரீடர் சேவையை கடந்த 2 ஆம் திகதி நிறுத்தியுள்ளது. இணைய வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் கூகுள் ரீடர் கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இணையத்தில் உள்ள தகவல்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பின் தொடர்வதற்கும் இந்த வசதி பயன்பட்டு வந்தது.
கூகுள் ரீடரை அதிகமானவர்கள் பயன்படுத்தி வந்தாலும், அதன் பயன்பாடு குறைந்து விட்டதாக கூறி அதன் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம்,தெரிவித்துள்ளது. இது இணைய வாசகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் ரீடரை போல அப்ஸ் ஸ்க்ரிப்ட் (Apps script), கூகிள் பில்டிங் மேக்கர் (google building maker), கூகிள் க்ளவுட் கன்னெக்ட் (google cloud connect), கூகிள் வாய்ஸ் ஆப் ஃபார் ப்ளாக்பெர்ரி (google voice app for blackberry) உள்ளிட்ட பல சேவைகளை நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது சேவைகளை திடீரென நிறுத்துவது இது முதல் முறையல்ல…இதற்கு முன்பும் தன்னுடைய பல்வேறு சேவைகளை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் வேவ் என்ற திட்ட மேலாண்மைச் சேவைக்கு, போதிய வரவேற்புக் கிடைக்காததால், அந்தச் சேவை 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
யூ ட்யூப் (YouTube)-க்கு போட்டியாகத் தொடங்கப்பட்ட கூகுள் வீடியோ என்ற சேவை திறன்படச் செயல்படவில்லை. இதனால் யூ ட்யூப் இணையதளத்தை விலைக்கு வாங்கிய கூகுள் நிறுவனம், கூகுள் வீடியோ சேவையை நிறுத்தியது.
இதேபோல், கூகுள் ப்ளஸ் சேவைக்கு முன்னோடியாக 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூகுள் பஸ் சேவையில், தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அடுத்த ஆண்டிலேயே இந்தச் சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2002-ஆம் ஆண்டில் இருந்து கணினி மென்பொருள் வல்லுநர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கிய கூகுள் லேப்ஸ் சேவை 2011-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
தற்போது இணைய வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் கூகுள் ரீடர் சேவை நிறுத்தப்பட்டது.

Comments