மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது, உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு, இவ்வகையில் முதல் இடம் பெற்றுள்ள, வாட்ஸ் அப், அண்மையில் இன்னும் ஒரு புதிய வசதியினை அதன் வாடிக்கையாளர்களுக்கு த் தந்துள்ளது.
ஒருவருக்கொருவர் தங்கள் குரல் வழி செய்தியையும் இனி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். “”வாய்ஸ் மெசேஜ்” என்று அழைக்கப்படும் இந்த வசதியை அறிமுகப்படுத்திய போதே, வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் 35 கோடி வாடிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த வசதி அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஐ போன், ஆண்ட்ராய்ட், பிளாக் பெரி, விண்டோஸ் போன் மற்றும் சிம்பியன் என அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், வாட்ஸ் அப் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலின் படி, ஒரு நாளில், 24 மணி நேர காலத்தில், 2,700 கோடி செய்திகளை, வாட்ஸ் அப் அனுப்பி சாதனை செய்தது.
இன்னொரு வகை தகவலில், வாட்ஸ் அப், அனுப்பிய வகையில் 1,100 கோடி செய்திகளையும் , பெற்ற வகையில் 2,000 கோடி செய்திகளையும் செயல்படுத்தியுள்ளது. ஆக, மொத்தம் 3,100 கோடி செய்திகளைக் கையாண்டுள்ளது. ஒவ்வொரு நாளூம், வாட்ஸ் அப் மூலம் 32 கோடியே 50 லட்சம் போட்டோக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி ஆகும். இதே போல 2 கோடி வாடிக்கையாளர்களை, வாட்ஸ் அப், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் பெற்றுள்ளது.
உலக அளவில், 45 நாட்கள் காலத்தில், ஏறத்தாழ 5 கோடி பேர் முதல் முறையாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
உலக அளவில், 45 நாட்கள் காலத்தில், ஏறத்தாழ 5 கோடி பேர் முதல் முறையாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாய்ஸ் மெசேஜிங் மூலம், ஒருவர் தங்கள் குரலைப் பதிவு செய்திடலாம். உடனடியாக, அந்த வாய்ஸ் பைல் உரியவரை, மெசேஜ் செல்லும் அதே வேகத்தில் சென்றடைகிறது. பெறுபவர், உடனே அதனை இயக்கிக் குரல் வழி செய்தியைக் கேட்கலாம். அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் மொபைல் சாதனத்தில் இது பைலாக பதியப்படுவதால், எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், வாய்ஸ் மெயிலை இயக்கிக் கேட்கலாம்.
இதனைப் பதிவு செய்திட, டெக்ஸ்ட் மெசேஜ் விண்டோவில், வலது பக்கம் உள்ள மைக் ஐகானை அழுத்திப் பேச வேண்டும். விரலை ஐகானிலிருந்து எடுத்தவுடன், வாய்ஸ் மெயிலாக இது செல்லும்.
வாய்ஸ் மெயிலை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தால், இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், வாய்ஸ் மெசேஜ் அழிக்கப்படும். அனுப்பப்பட்ட வாய்ஸ் மெயிலைப் பெற்றவர் கேட்டு முடித்துவிட்டால், வழக்கம் போல கூடுதல் டிக் அடையாளம் மூலம் அது தெரிவிக்கப்படுகிறது.
வாய்ஸ் மெசேஜைப் பெறுபவர் தன் போட்டோவுடன் அக்கவுண்ட்டைப் பதிந்து வைத்திருந்தால், அவருடைய படம், மெசேஜ் கால அளவு ஆகியவை காட்டப்படும். பெறுபவர் மெசேஜைக் கேட்டுவிட்டல், ஐகான் நீல நிறத்திற்கு மாறும்.
வாய்ஸ் மெசேஜைப் பெறும் ஒருவர், மெசேஜ் விண்டோவில் இருக்கும் ஐகான அழுத்தி, அனுப்பியவர் பதிந்த செய்தியைக் கேட்கலாம். இதற்கெனத் தனியே ஆடியோ பிளேயர் எதுவும் தனியே இயக்கப்பட மாட்டாது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனிலேயே குரலைக் கேட்கலாம்.
ஒரு வாய்ஸ் மெசேஜ் எவ்வளவு நேரம் பதியப்படலாம் என்பதற்குக் கால அளவு என எதனையும் வாட்ஸ் அப் தரவில்லை.
இந்த வசதியையும் சேர்த்து, வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம், டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ மற்றும் குரல் எனப் பல வழிகளில் நண்பர்கள் தங்களுக்குள் எளிதாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
இதே போன்றதொரு அப்ளிகேஷன் ஒன்றை, இந்திய நிறுவனமான பாரதி சாப்ட்பேங்க், ஹைக் (Hike) என்ற பெயரில் ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் அப்ளிகேஷனை 50 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் டென்சென்ட் நிறுவனம் WeChat என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷனைத் தந்து வருகிறது.
வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பொறுத்த வரை, இந்நிறுவனம் இதற்கென எந்த விளம்பரத்தினையும் வெளியிட்டதில்லை. மெசேஜ் அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும் மட்டுமே, பல கோடிக்கணக்கானவர்களை இதனைப் பயன்படுத்த வைத்துள்ளது. வாட்ஸ் அப் ஒரு குறையை மட்டும் விட்டு வைத்துள்ளது.
படங்களை அனுப்புகையில் அதற்கான குறிப்புகளைத் தனி மெசேஜாகத்தான் அனுப்ப முடிகிறது. அதாவது ஒரு படத்தை அனுப்பிய பின்னர், அதற்கான குறிப்பினை தனியே இன்னொரு மெசேஜாகத்தான் அனுப்ப முடியும். விரைவில் வாட்ஸ் அப் இந்தக் குறையை நீக்கும் என எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment