அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்லாந்து நாட்டின் நோக்கியா மொபைல்போன் வர்த்தகத்தை 7.2 பில்லியன் டாலருக்கு வாங்கவிருப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தகம் முடிவடைந்தவுடன் நோக்கியா நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரியான ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் வர்த்தகத்தில் முன்னிலையில் இருந்த நோக்கியா நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்றவற்றுடன் போட்டி போடமுடியாமல் திணறுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சோதிக்கப்படாத விண்டோஸ் மென்பொருள் தொழில்நுட்பத்தினைத் தங்களுடைய மொபைல்போனில் நோக்கியா உபயோகித்து வருகின்றது. இந்த முயற்சியின் வெற்றியே இன்னும் கிட்டவேண்டியுள்ளது.
இதனிடையில், புதிய ஒப்பந்தம் வரும் 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை, நோக்கியா நிறுவனம் ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்தும், நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்தும் பெறவேண்டும். எதிர்காலத்திற்கான ஒரு தைரியமான நடவடிக்கை இது என்று மைக்ரோசாப்ட் தலைமைப் பொறுப்பில் இருந்து விரைவில் ஒய்வு பெறும் ஸ்டீவ் பால்மர் கூறியுள்ளார். நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நுகர்வோர்கள் அனைவருக்கும் இந்த முயற்சி வெற்றியை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டு பெரிய அணிகள் ஒருங்கிணையும் இந்த வர்த்தகம் இதன் சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் வாய்ப்புகளை பலப்படுத்தும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளையும் மற்றும் லாபத்தினையும் இந்த முயற்சி அதிகரிக்கும் என்றும் ஸ்டீவ் பால்மர் கூறினார்.
Comments
Post a Comment